பாடசாலை

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம்

 


மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம் மீண்டும் ஆரம்பம் பச்சைப்பசேல் என நீண்ட வயல்களின் நடுவே கல்வித் தெய்வத்தின் நாமத்துடன் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம் பாலர் வகுப்பிலிருந்து பதினொராம் வகுப்பு வரையான தரங்களுடன் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்தப் பாடசாலையின் எல்லைக்குள்ளேயே பாலர் வகுப்புகள் நடாத்துவதற்கான சிறந்த கட்டடமும் அமையப்பெற்றுள்ளமை முக்கியத்துவமிக்கதாகும். மறவன்புலோவின்; சகல பிரிவுகளிலும் உள்ள மூன்று வயதையடைந்த பிள்ளைகள் இந்த முன்பள்ளியில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிக்க நான்கு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தரம் ஒன்று தொடக்கம் பதினொராம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்கு அனைத்துத் தரங்களுக்கும் மாணவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான முன்னணி ஆசிரியர் குழுவொன்றைத் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நியமித்துள்ளமை சிறப்பானதாகும்.

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்குத் தேவையான வகுப்பறைத் தொகுதிகளையும், பிரதான மண்டபத்தையும் மிகச் சிறப்பான முறையில் கட்டி முடித்த SDC என்ற சுவிற்சலாந்து நிறுவனம் அதனை ஒரு நிகழ்வில் அதிபரிடம் கையளித்துள்ளது. அத்துடன் குடிதண்ணீர் வசதிக்காகப் பதினைந்து லட்சம் ரூபா செலவிலான வேலைகளையும் பூர்த்தி செய்து பாடசாலை நிர்வாகத்திடன் இந்த நிறுவனம் கையளித்துள்ளது.

இப்பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளத்தின் ஒரு தொகுதியை தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் நிதிப் பிரிவு வழங்கியுள்ளது. இப்பாடசாலைக்குத் தேவையான ஏனைய பௌதீக வளங்களை வழங்கி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பது இங்கு செயற்படுகின்ற அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் கடமையாகின்றது. இது ஒரு மீள்குடியேற்றத்துக்குட்பட்ட பாடசாலையாகும். பத்து வருட யுத்தத்தின் பின்னர் மிக்க தன்னம்பிக்கையுடன் இந்த பகுதிப் பிள்ளைகள் கல்வி கற்க வருகின்றனர். அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தன்னை மிகவும் அர்ப்பணித்த சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் மகத்தான தொண்டினை இந்த பிரதேச மக்கள் என்றென்றும் நினைவு கூறுவர்.

 

 

 

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme