செய்திகள்

இத்தகவலை முழுமையாக படியுங்கள் நன்மையே நடக்கும்

அன்பிற்கும் மதிற்புக்குமுரிய பழைய மாணவர்களே மற்றும் சமூக அக்கறையுடையோரே !

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலையினதும் கிராம வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட தாங்கள் தற்போதய பாடசாலையின் நிலையினைஅறிவது சால சிறந்ததாகும்.
பாடசாலைக்கு தேவையான பல தேவைகள் எமது புலம் பெயர் மற்றும் கிராம பழைய மாணவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் நிறைவேற்றியுள்ளனர் அச்செய்தியை நீங்கள் இணையத்தளமூடாகவும் அறிந்திருப்பீர்கள்
தாங்கள் பாடசாலையில் கல்வி கற்ற பழைய நினைவுகளை மறந்திருக்கமாட்டீர்கள் ஒவ்வொரு வகுப்புக்களும் திறந்த வெளியாகவும் விஞ்ஞான நூலக கூடக வசதி மற்றும் சிறந்த விளையட்டு திடல் அற்ற எமது கல்வித் தாய் வீட்டை யாரும் மறந்துவிட முடியாது
தாங்கள் கல்வி கற்ற காலத்தில் எமது பாடசாலை எந்தவொரு விளையாட்டிலும் வலய ரீதியாகவோ மாவட்ட ரீதியாகவோ ஏன் பிரதேச ரீதியாக கூட ஓரளவு கூட சிறந்ததாக விளங்கியதில்லை இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை அதற்கு காரணம் தாங்கள் அல்ல பாடசாலையில் சீரான விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாததேயாகும்

எங்கள் கிராமத்தின் நெற்பயிர்ச் செய்கை முடிந்து குறித்த ஒரு காலப்பகுதியில் தனியார் வயல் நிலத்தை எமக்கு ஏற்றவாறு ஓரளவு தரப்படுத்தி விளையாட்டு போட்டி நிகழ்வுகளை மட்டும் நடத்திவிட்டு அதற்கு பிறகு அடுத்த விளையாட்டுப் போட்டி வரை எந்தவொரு விளையாட்டுப் பயிற்சியிலும் கூட ஈடுபடுவதில்லை மிகவும் கவலைக்குரிய விடயமாக காலம் கடந்து விட்டது
தற்பொழுது ஒவ்வொரு பாடசாலையும் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்ததாக விளங்குகின்றது அதற்கு பாடசாலைச் சமூகம் மட்டுமன்றி பழைய மாணவரும் கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் மட்டுமே காரணமாகும்

எமது அன்பார்ந்த உறவுகளே!
தற்பொழுது எமது பாடசாலைக் காணியுடன் இணைந்த அருகில் இருக்கின்ற 30 பரப்பு கொண்ட வயல் காணியொன்று விற்பனைக்காக பாடசாலைக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு அதன் உரிமையாளர் முன்வந்ததுடன் குறித்த காலவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது நாம் குறித்த காலத்தில் காணியை கொள்வனவு செய்யாதவிடத்து அது வேறொரு தனி நபருக்கு விற்பனையாகிவிடும் என்பதை நாம் உணர்ந்துகொள்வது முக்கியமானதாகும்
அன்பார்ந்த எமது உறவே “பல ஆயிரம் தேனீர்க்கள் ஒன்று சேர்ந்தே ஒரு தேன் கூட்டை உருவாக்கின்றது” அவ்வாறொதொரு முயற்சியையே ஆரம்பித்துள்ளோம்
தயவு செய்து தாங்களால் இயன்ற தங்களால் வழங்கக் கூடிய நிதியை எதிர்பார்க்கின்றோம் தயவு செய்து எமக்கு சிறந்த பதிலொன்றை தாருங்கள்
தாங்கள் தர விரும்பும் நிதியை தாங்கள் விரும்பும் இடத்திலயே வந்து பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவும் உள்ளோம்.
“”தாயையும் தாய் மண்ணையும் மறப்பது நமக்கு நாம் செய்யும் தீங்காகும் அவ்வாறதொன்றே கல்விக் கூடமும்””

தொடர்புகளுக்கு- தலைவர் :- யோ.ஜெயகாந்தன் (அதிபர்)-தொலைபேசி எண் 0094779580815

உபசெயலாளர் :- க.துஷ்யந்தன்-தொலைபேசி எண் 0094776589402

சச்சிதானந்தம் பாலராஜ் ஜேர்மனி தொலைபேசி எண் -004915218496767 Skype ID :- maravanpulo2

இரகுநாதன் சர்வேந்திரன் இத்தாலி தொலைபேசி எண் :- 00393932209858 Skype ID :- sarvan825

கனகரத்தினம் தனேந்திரன் சுவிஸ் தொலைபேசி எண் :- 0041-768199093 Skype ID :- kthanenthiran

இத்தகவலுடன் தொடர்புடைய முன்னய செய்தி இணைப்பு-பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கான காணிக் கொள்வனவிற்கு நிதியுதவி செய்க!! -பழைய மாணவர் சங்கம் கோரிக்கை.

*சிறு துளி பெருவெள்ளம்*

  மீள் எழிச்சி பெறுமா?  

                               தென்மராட்சி தெற்கு. 

                                                                                                தி.விக்னேஸ்வரன் –  தனங்கிளப்பு 

யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழியிலிருந்து   கிழக்குத் திசையாக நாவற்குழி  – கேரதீவு  A 32 நெடுஞ்சாலையை அண்மித்த குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டது தென்மராட்சி தெற்குப் பிரதேசம்.யாழ் குடா நாட்டின் பரந்த, பெரிய வயல் வெளிகளையும் மற்றும் தென்னை, பனை முதலிய பயன்தரு மரங்களையும் 30 Km நீளமான கடற்கரையோரத்தினையும் கொண்ட ஒரு எழில் கொஞ்சும் பிரதேசமாக 12.12.1999 வரை காணப்பட்டது. இந்தப் பிரதேசம் நாவற்குழி, தச்சன்தோப்பு, வேலம்பிராய், கோவிலாக்கண்டி, மறவன்புலோ, தனங்கிளப்பு, அறுகுவெளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.

இந்தப் பிரதேச மக்கள் 12.12.1999இல் திடீா் என்று ஏற்பட்ட எதிர்பாராத பிரச்சினையால் உடன் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். அதிலும் தனங்கிளப்பு, மறவன்புலோ மக்கள் தங்கள் உடமைகள் யாவையும் கைவிட்டு உடுத்த உடுப்புடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இடப்பெயர்வின் போது பலர் ஷெல் தாக்குதல்களால் காயப்பட்டும் சிலர் இறந்தும் இருந்தனர்.சில காலங்களின் பின்னா் நாவற்குழி, தச்சன்தோப்பு, வேலம்பிராய், கோவிலாக்கண்டி ஆகிய பிரதேச மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். மறவன்புலோ மக்களும் 2010 ஆம் ஆண்டு மீளக்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட போதும் அடிப்படை தேவைகள் பல பூா்த்தி செய்யப்படவில்லையென்று பலர் தமது ஆதங்கங்களைத் தெரிவிக்கின்றனர்.

 மீளக்குடியமர்வும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்

தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவு மக்களைப் பல தடவைகள் மீளக்குடியமர  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கிராம அலுவலர் பிரிவிலுள்ள 250 குடும்பங்களில் 40 குடும்பங்கள் பாதுகாப்பு படையினரின் உரிய அனுமதியின்றி 2010 ஆண்டு நடுப்பகுதியில் மீளக்குடியமர்ந்தனர். இந்த நிலையில் அரசினால் 10.07.2011 இல் மீளக்குடியமர்விற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டு அரசியல்  பிரமுகர்களும் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வினைச் சிறப்பித்தனர். இதில் இந்தக் கிராமத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் அதனை மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்முயற்சிகள் பற்றியும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இதன்போது மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சாவகச்சேரியிலிருந்து தென்புறமாகப் பார்க்கும் போது சோலைவனமாகக் காட்சியளித்த தனங்கிளப்பு பிரதேசம் கௌதாரிமுனை, வெட்டுக்காடு போன்ற வன்னிப் பிரதேசங்கள் தெரியுமளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது. சமநிலங்களாகக் காணப்பட்ட பல  பகுதிகள் பாதுகாப்பு அணைகள், காவலரண்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக நிலப்பகுதிகள் ஒப்பிரவின்றிக் காணப்படுகின்றன.

இதனால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளின் எல்லைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இந்தப் பிரதேச மக்கள் உடுத்த உடுப்படன் வெளியேறியதனால் காணி உறுதிகள், கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களைக் கைவிட்டுச் சென்றனர். இதனால் மீளக் குடியமர்வு, வேலை வாய்ப்பு ,கல்வி பதிவு முயற்சிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பிரிவில் 250 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த மக்களுக்கு இராணுவத்தினரால் 5 வீடுகளும் சுவிஸ் நிறுவனத்தினால் 50 வீடுகளும் கட்டிக் கொடுப்பதற்கு முதற் கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது. பல குடும்பங்கள் காணிகள், காணி உறுதிகள் இல்லாது வீட்டுத் திட்டம் எங்களுக்கும் கிடைக்காதா? என எண்ணி அலைந்து திரிவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

வீட்டுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர் புறக்கணிப்பு.

 

இந்த வீட்டுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர் புறந்தள்ளப்படுவது கவலைக்குரியது. அரச உத்தியோகத்தரை பொறுத்தவரை ஒரு சிலரே காணப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை ஒரே நாளில் இழந்தவர்கள். அவர்களால் தங்கள் உயிரை உடலுடன் வைத்திருக்க மட்டுமே அவர்களின் ஊதியம் போதுமானது. எதிர்காலத்தில் அவர்களால் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது இயலாத காரியம். எனவே பாரபட்சம் பார்க்காது தங்களுக்கும் ஏனையோர்களைப் போல உதவிகள் கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும் என அரசியல்வாதிகளிடமும் அரச, அரச சார்பற்ற நிறுவன உயரதிகாரிகளிடமும் கோரிக்ககை விடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

                    விவசாயப் பாதிப்புக்கள்

தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவு நெற்செய்கை பிரதேசம் கீரைவாய்க்கால், மஞ்சள் குளம், பனங்காய்க்குளம் ஆகிய நேர்கோட்டுப் பகுதிகளுக்கு கிழக்காகவுள்ள பிரதேசமாகும். இப்பிரதேசம் அண்ணளவாக 1500 ஹெக்டேயர் வயல் நிலங்களைக் கொண்ட புளியம்பிட்டி, வடக்குவெளி, சங்குப்பிட்டி, பீக் கூட்டம்,  அறுகுவெளி, நல்லோட்டந் தரவை, துண்டி, பனங்காய்க் குளவெளி ஆகிய முக்கிய வயல்வெளிப் பிரதேசங்களைக் கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதி புகையிரதக் கடவையில் ஆரம்பித்து தென்புறமாகவுள்ள தனங்கிளப்பு அம்மன் கோவில் கடற்கரை  வரை நோ்கோடாக தற்காலிக முள்வேலிகள் அமைக்கப்பட்டு தென்மராட்சி தெற்குப் பிரதேசத்தில் கை விடப்பட்ட மாடுகள் இம் முள்வேலியின் கிழக்குப் புறமாக ஒதுக்கிவிடப்பட்டு மேற்குப் புறம் மாத்திரம் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மீளக்குடியமர்வுக்கு அனுமதி கிடைத்துள்ள வேளையில்  கால்நடைகளைக் கட்டுப்படுத்தி விவசாயத்திற்கென அமைக்கப்பட்ட தற்காலிக வேலியை அகற்றி இந்த வருடம் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள உதவுமாறு அரசியல்வாதிகளிடமும் பிரதேச செயலரிடமும் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பிரதேச செயலர் திட்டமிடல் பணிப்பாளர் விவசாய உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடி கால்நடைகளைக் கட்டுப்படுத்தி இந்த வருடம் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதும் சில நடைமுறைச் சிக்கல்களால் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவது தாமதமாகி வருகின்றது. இதனால் இந்தப் பிரதேச மக்கள் இந்த வருடமும் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாதா? என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.

              மீன்பிடிப் பாதிப்புக்கள்

தனங்கிளப்பு முதல் கேரதீவு வரை ஆழமற்ற கடற்பரப்புக்களைக் கொண்டு விளங்குகின்றது. இந்த மீன்பிடிப்பிரதேசம்  ஆழமற்ற கடல்நீரேரி, இருநீர்க்கலப்புக்கள், நீரோட்டம் என்பன மீன்பிடிக்கு வாய்ப்பாக அமைகின்றன. இங்கு கரையோர மீன்பிடி முக்கிய இடம் பெறுகின்றது. நாவற்குழியிலிருந்து கேரதீவு வரையுள்ளவர்களும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுமாக 2000 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். பெப்ரவரி, ஒக்டோபர் மாதங்களில் இறால், நண்டு, மீன்வகைகளும் ஏனைய காலங்களில் மீன்களும் பிடிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தப் பிரதேசம் மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இருப்பினும் அவர்களால் கடற்றொழிலை மேற்கொள்ள பொருளாதார வளம் ஒரு பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் தனங்கிளப்பு கடற்றொழிலாளர் சங்க எல்லைப் பரப்பில் அரச சரா்பற்ற நிறுவனத்தால் 30 ஆயிரம் பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். எனினும் தாங்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி  தேவைப்படுவதோடு பாதுகாப்புப் படையினரால் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட, கைவிடப்பட்ட காவலரண்கள், கடலுக்குள் நடப்பட்டிருக்கும் கட்டைகள், பாதுகாப்பு வேலிகளை அகற்றிச் சுதந்திரமாக மீன்பிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதசாரிகளும் குடியிருப்பாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.

நாவற்குழியிலிருந்து மன்னார் வரை ஏ- 32 பாதையுள்ளது. இதில் நாவற்குழியில் இருந்து  கேரதீவு வரை தென்மராட்சி தெற்குப் பிரதேசம் ஆகும். இதில் நாவற்குழியில் இருந்து தனங்கிளப்பு வரை குடியுருப்புக்கள் உள்ளன. ஏ -32 வீதியை அண்டிய வீதிக் குடியிருப்பே பிரதானமான குடியிருப்புக்களாக காணப்படுகின்றன.

கடந்த வருட இறுதியில் இவ்வீதியை செப்பனிடுவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார  சபை முதற்கட்டமாக உழுது மட்டப்படுத்தி இருந்தது. தற்போது யாழ் குடாநாட்டில் இருந்து மன்னாருக்கும் ஏனைய பிரதேசங்களுக்குமான கனரக போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் இவ்வீதி ஒரே தூசி மண்டலமாகக் காட்சியளிக்கின்றது. வீதிகள் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாகனங்கள்  விபத்துக்குள்ளாவதோடு பழுதடையவும் நேரிடுகின்றன. இது தவிர வேலையின் நிமித்தம் வெளியிடங்களுக்குச் செல்வோரும் வெளியிடங்களிலிருந்து குடநாட்டிற்கு வருவோரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது. அத்துடன் வீதியை அண்டிய குடியிருப்புக்கள் தூசுப் படிவால்  பெரும் சிரமங்களை எதிர்கொள்ளுகின்றன.

இதனால் இந்தக் குடியிருப்புக்களில் வாழ்வோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இனிவரும் காலம் மாரி காலம் ஆகையால்அதற்கு முன்னர் வீதியை செப்பனிட்டுப் போக்குவரத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குடிதண்ணீருக்காக அலையும் மக்களும் கால்நடைகளும்

இடப்பெயர்வுக்கு முன்னர் இருந்த பல கிணறுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. இருக்கும் கிணறுகளும் அசுத்தமாகவும்  உப்பு நீராகவும் காணப்படுகின்றன. இதனால் நன்னீருக்காக நீண்ட தூரம் வரை அலைந்து திரிந்து நீரைப் பெறும் பரிதாப நிலையைக் காணக் கூடியதாகவுள்ளது.

கால்நடைகளைப் பொறுத்தவரையில் இங்குள்ள கால்நடைகளுக்கு ஒரு சில குளங்களே பயன்பாட்டில் இருந்து வந்தன. தற்போது ஏற்பட்ட கடும் வரட்சியால் ஒர சில நீர் நிலைகளிலேயே  நீர் தேங்கி நிற்கின்றது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் மாட்டுத் திருடர்கள்  தடம் வைத்து மாடுகளைப் பிடித்து இறைச்சி போட்டு சூக்குமமாக அனுப்பிக்கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான மாடுகள் கால்கள், கழுத்து என்பவற்றில் நைலோன் கயிறு, கேபிள்கள் என்பன இறுகி இறந்து கிடப்பதையும் சில மாடுகள் இறுகிய கேபிள்கள், நைலோன் கயிறுகளுடன் அலைந்து திரிவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த விடயங்களை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மக்களின் சுமூக வாழ்விற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி – உதயன் 09.08.2011                                            பதிவு – துஷி

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme