தென்னிலங்கை வர்த்தகரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த வர்த்தக பெருமகன் சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் நண்பர்கள் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார்;.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் பொதிகளை வழங்கினார். இன்று (09) நண்பகல் 12.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.வை.ஜெயகாந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. தென்மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம், உதவிக் கல்வி பணிப்பாளர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அப்பியாச கொப்பிகள்,பாதணிகள்,புத்தக பைகள் உள்ளிட்ட கற்றல் நடவடிக்கைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. ஆளுநரின் உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம். அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி மக்கள் தொடர்பு அதிகாரி நிசாந்த அல்விஷ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய ஆளுநர் அவர்கள், தென்னிலங்கையிலிருந்து சிங்கள மொழி பேசும் நண்பர்கள் உங்களுக்காக பல இலட்சம் ரூபாய் செலவளித்து இங்கே வந்திருப்பது நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற செய்தியை சொல்வதற்காகவே. அவர்கள் அன்பு இரக்கம் கருணை உள்ளிட்டவற்றினை மனங்களில் கொண்டு இங்கே உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கின்றார்கள். உங்களிடமிருந்து எதனையும் அவர்கள் எதிர்பார்த்து இந்த உதவிகளை செய்ய வில்லை. யுத்தத்தால் பின்னடிக்கப்பட்ட இந்த மாணவர்கள் தமது கல்வியில் உயர் நிலையினை அடைய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கோடு இந்த கற்றல் உபகரணங்களை அங்கிருந்து கொண்டு வந்து உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உயரிய பதவிகளில் தமிழர்களே சிறந்து விளங்குகின்றனர். மற்றும் பொறியியல்  துறையிலும், மருத்துவத்துறையிலும் யாழ்ப்பாண தமிழர்களே சிறந்து விளங்குகின்றார்கள். எனவே நீங்களும் அந்த மாதிரி சிறந்த கல்வியாளர்களாக வருகின்ற போது  இனம், குலம், மொழி பார்க்காது நாட்டில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் உங்களது கடமையினை வேறுபாடு இன்றி ஆற்ற வேண்டும் என்றே நான் எதிர்பார்கின்றேன். என்று தெரிவித்தார்.

Updated: January 9, 2018 — 2:20 pm

LIVE TV

© 2011-2017 Maravanpulo.com, All rights reserved. Frontier Theme